பாட்டு சூட்டிங்கிற்கு பாரீன் ‌போவது அவசியமா?


Is it apt to shoot Songs in foreign location
பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக பாரீன் போகும் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கிராமத்து சப்ஜெக்ட் படமாக இருந்தாலும் கனவு பாடலை உருவாக்கி, அதை வெளிநாட்டில் படமாக்குவார்கள். படம் ஆரம்பிக்கும்போது பாவாடை - தாவணியில் வரும் நாயகி கனவுப்பாட்டில் பாரீனில் குட்டைப்பாவாடை அணிந்து குத்தாட்டம் போடுவார். இப்படி பாட்டு சூட்டிங்கிற்கு பாரீன் போவது அவசியமா? என்ற பட்டிமன்றமும் கோடம்பாக்கத்தில் அவ்வப்போது நடப்பதுண்டு. இதுபற்றி ஆதிக்கம் பட டைரக்டர் அனிஷ் அளித்துள்ள பேட்டியில், பாடல் காட்சிகளை படமாக்குவதற்கு வெளிநாடுகளுக்கு போவதை தவறு ‌என சொல்ல முடியாது. ஒரு படத்தின் வெற்றிக்கு கதை எப்படி முக்கியமோ... அதேப்போல லொகேஷன்களும் முக்கியம்தான். நம்மூரில் இருக்கும் சாதாரண ரசிகனால் அமெரிக்காவுக்கோ, சிங்கப்பூருக்கோ, லண்டனுக்கோ சென்று வர முடியாது. ஆனால் சினிமா மூலம் அவர்களும் வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கிறார்கள். அங்குள்ள மக்களின் கலாச்சாரம், அங்குள்ள சாலை விதிமுறைகளை சினிமா காட்சிகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். நம் ஊரில் சிக்னலை மதிக்காமல் மின்னல் வேகத்தில் பறக்கும் ஆசாமிகள், சினிமாக்களில் வரும் வெளிநாட்டு காட்சிகளில் அங்குள்ளவர்கள் எப்படி டிராபிக் ரூல்சை பின்பற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இது எத்தனையோ படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. (ஆனாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டேங்கிறாங்களே!) மெகா பட்ஜெட் படம் என்ற இமேஜூக்காகவும் வெளிநாடு செல்கிறோம். நான் இயக்கி வரும் ஆதிக்கம் படத்தில் இடம்பெறவிருக்கும் 2 பாடல் காட்சிகளை படமாக்க விரைவில் வெளிநாடு செல்லப் போகிறோம், என்று கூறியுள்ளார்.

23 வயதே ஆகும் டைரக்டர் அனிஷ் இப்போது தயாரித்து, இயக்கி வரும் ஆதிக்கம் படத்தில் விவின் என்ற புதுமுகம் நாயகனாகவும், மேகாநாயர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னை நகர சந்து பொந்துகளில் தத்ரூபமாக காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கும் அனிஷ் சினிமாவின் வெற்றிக்கு பாரீன் லொகேஷன்களும் கண்டிப்பாக உதவும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

வாசகர்களே... பாட்டு சூட்டிங்கிற்கு பாரீன் போவது அவசியமா? உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆதிக்கம் செலுத்தப் போறேன் : மேகா நாயர்


Actress Mega nair speeks about Aadhikkam movie
தொடக்கம் படத்தில் நாயகிகளில் ஒருவராக வந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா நாயர். அந்த படம் ரசிகர்களால் கவனிக்கப்படாவிட்டாலும், அடுத்து நடித்த பசுபதி மே.பா.ராசக்காபாளையத்தில் முண்டு கட்டி வந்து ரசிகர்களை திண்டாட வைத்த பெருமையைப் பெற்றது இந்த கேரளத்து வண்ணத்துப்பூச்சி. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று வெட்டி பந்தா காட்டும் நாயகிகளுக்கு மத்தியில் நல்ல டைரக்டரை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்ற புதிய ‌கோணத்தில் பேசுகிறார் மேகா. ஒரு டைரக்டர்தான் தனது கதைக்கு பொருத்தமான நடிகை யார் என்பதை தேர்ந்‌தெடுக்க வேண்டும். நடிகையை தேர்ந்தெடுத்து விட்டு கதையை யோசிக்கக் கூடாது என்று சொல்லும் மேகா, தற்போது ஆதிக்கம் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆதிக்கம் படத்தின் டைரக்டர் அனிஷ் 23 வயது இளைஞர். எந்த டைரக்டரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இளம் வயதிலேயே படம் இயக்கி வரும் அனிஷ் பற்றி மேகா கூறுகையில், இது இளைஞர்கள் காலம், இளைஞர்களின் உணர்வுகள் அனுபவஸ்தர்களை விட இளைஞர்களுக்குத்தான் நன்றாக தெரியும். டைரக்டர் அனிஷின் ஆதிக்கம் படத்தின் கதையும் இளைய சமுதாயத்தைப் பற்றியது. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தவறான வழியை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், காதல் மொழி பேசும் இளைஞன் கத்தி தூக்குவது எதனால்... என்பது போன்ற பல உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆதிக்கம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் ஓ.கே. சொல்லி விட்‌டேன். ஆதிக்கத்தில் எனது கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. எனவே இந்த படம் கண்டிப்பாக எனது மார்க்கெட்டை உயர்த்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றார்.

நிழல் உலகம் பற்றிய நிஜக்கதை! ஸ்பெஷல் ரிப்போர்ட்


Aadhikkam movie director Anish interview
இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்ற சப்-டைட்டிலுடன் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அப்படியொரு வெற்றிப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர் டைரக்டர் அனீஷ். இது இளைஞர்களின் காலம். அதற்கு திரையுலகம் மட்டும் விதிவிலக்கா என்ன? என்ற கேள்வியுடன் திரையுலகில் நுழைந்திருக்கிறார் 23 வயது இளைஞர் அனீஷ். சாதிக்கும் எண்ணம் கொண்ட இளைஞர் படையொன்றை திரட்டி 'ஆதிக்கம்' படம் மூலம் யுத்தத்துக்கு தயாராக்கிக் கொண்டிருக்கும் அனீஷ், நிழல் உலகத்தைப் பற்றிய பல நிஜங்களை 'ஆதிக்கம்' கொண்டு வந்து சாதிக்கும் என்று நம்புகிறேன்' என நம்பிக்கை ‌தெரிவிக்கிறார். அவரது தன்னம்பிக்கை தெரிக்கும் பேட்டி:-

உங்களைப் பற்றி...?

"என் அப்பா பிரபல தயாரிப்பாளர் பத்மநாபன். அவர் தெலுங்கில் பல படங்கள் தயாரித்தவர். அவர் இப்போது இல்லை. நான் சினிமாவில் அனுபவப்பட்டே கற்றுக் கொள்ள விரும்பும் ரகம். எல்லாக் கஷ்டங்களுக்கும் எனக்கு தெரிய வேண்டும் என்று கடைக்கோடி ஆளாகவும் வேலை பார்க்க தயங்காதவன் நான். சமுதாயப் பிரச்சினை சார்ந்த கதைதான் 'ஆதிக்கம்'. மக்களைப் பரவலாக சென்றடைய திரைப்படத்தை தவிர சிறந்த சக்தி வாய்ந்த சாதனமில்லை. எனவே சினிமாவுக்கு வந்து விட்டேன்.

ஆதிக்கம் எந்த மாதிரியான கதை?

"இது ஆக்ஷன், காதல், காமெடியுடன் முழுக்க முழுக்க நாட்டுநடப்பை சொல்லும் படம். நாட்டில் நடக்கும் இன்றைய பிரச்சனைகளின் கண்ணாடி போல 'ஆதிக்கம்' இருக்கும். ரவுடியிசத்தில் தொடங்கும் படம் அரசியலில் முடியும். நான் அறிந்தவரை பல ரவுடிகள், தாதாக்கள் சூழ்நிலையால் வந்தவர்களல்ல. விரும்பியே ரவுடியாகிறார்கள். விருப்பத்துடன் ரவுடியிசம் செய்கிறார்கள். சாதாரண ரவுடி தாதாவாக பதவி உயர்வு பெறுகிறான். எல்லாம் தானாகவோ, சூழ்நிலை கொண்டு விட்டோ நடப்பது கிடையாது. மனம் விரும்பியே செய்கிறார்கள், நடக்கிறது. நான் சொல்வது இந்த ரவுடிகள் வெறும் கருவிகள். இவர்களை உருவாக்குவது அரசியல்வாதிகள் தான். இளைஞர்களின் பண சபலத்தை மூலதனமாக்கி அவர்களை ரவுடிகளாக்குகிறார்கள். காரியத்தை முடித்துக் கொண்டபின் கைகழுவ நினைப்பார்கள். ஆனால் அதிகாரபலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆதரவால் ஆட்டம் போட்ட ரவுடிகளுக்கு நாற்காலிக் கனவு வந்து விடுகிறது. எப்படியோ சீட் பிடித்து எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி வரை ஆகிவிடுகிறார்கள். அப்படி ஒரு ரவுடி எம்.பி. ஆகிறான். அவன் மற்றும் அவனது கும்பல் பற்றிய கதைதான் 'ஆதிக்கம்'.

ரவுடிகள் விரும்பியே அந்த தொழிலில் இறங்குகிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?

தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும் என்பது போதையாகி விடுகிறது. அதை அதிகப்படுத்தியே ஆசைப்படுகிறான். பெரிய ரவுடி கையில் ஒரு கத்தியை பார்த்தால் அது நம் கையிலிருக்காதா என்று நினைக்கிறான். எங்காவது துப்பாக்கி பார்க்கும்போது அது தன் கையில் இருக்காதா, அதை வைத்து நம்மைக் கண்டு பயப்பட மாட்டார்களா என்று நினைக்க ஆரம்பிக்கிறான், விளைவு? ரவுடியாக வேண்டும் என்கிற ஆசை அதிகமாகிக் கொண்டே போகிறது. சேராத இடம் சேர்கிறான். போகக் கூடாத இடம் போகிறான். நடக்கக் கூடாத முடிவு கிடைக்கிறது. அதுதான் மரணம். ரவுடிகளை காரியத்துக்கு பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் போலீஸை வைத்து என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.

கொடூரமான ரவுடிகளுக்கு என்கவுண்டர்தானே முடிவு?

சிறு வெட்டுக் குத்து என்றால் கூட பல ஆண்டுகள் உள்ளே போட்டு விடுகிறார்கள். சிறு திருட்டு என்றால்கூட ஜாமீன் கிடைக்காது நம் நாட்டில். ஆனால் பல லட்சம் கோடி பணத்தை சுருட்டிய சாமியார்கள் ஜாலியாக உலா வருகிறார்கள். சட்டம் எதுவும் செய்யாது. பல பாலியல் பலாத்காரம் செய்த சாமியார்கள் சகஜமாக இருக்கிறார்கள். ஆனால் ரவுடிகளுக்கு என் கவுண்டர்தான் முடிவு. அப்படிப்பட்ட ரவுடிகளை ஊக்குவித்து வளர்த்த அரசியல்வாதிகளுக்கு எந்த கவுண்டரில் போடுவது?

படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்த எல்லா ரவுடியிசம், தாதாயிசம் வன்முறை எல்லாவற்றுக்கும் பின்புலமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்தான். மறைமுகமாக வேலைகளையும் செய்துவிட்டு ஒயிட் ஆண்டு ஒயிட்டில் உல்லாசமாக உலா வருகிறார்கள். இன்று யாருடைய ஆதிக்கம் உள்ளது. மக்களாட்சி நாடு என்று பெயர்தான் தவிர முழு ஆதிக்கம் செய்வது அரசியல்வாதிகள்தான். இதை நாட்டு நடப்புகளை கலந்து சொல்லியிருக்கிறேன்.

கதாபாத்திரங்கள் பற்றி?

ஐந்து பேர் நண்பர்கள். ரவுடிகள், அதில் ஒருவன் விருப்பப்பட்டு எம்.பி.யாகிறான். அவரை சுற்றி நடக்கும் பரபரப்பான திருப்பங்கள்தான் படக்கதை, படத்தின் நாயகன் வீவின், நாயகி மேகா நாயர்.

படப்பிடிப்பு எந்த அளவில் உள்ளது?

45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டது. இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதை. சென்னையில் கேமரா நுழையாத பல இடங்களில் புகுந்து படமாக்கி உள்ளோம். பாடல், சண்டைக் காட்சிகள் தவிர மற்ற அனைத்தும் படமாகிவிட்டது. இரண்டு பாடல்களுக்காக மெக்சிகோ செல்ல இருக்கிறோம்.

Thanks : Dinamalar.com

ஆதிக்கம் சிறு முன்னோட்டம்

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், அரசியல் ஆதிக்கம், ரவுடி ஆதிக்கம் போலீஸ் ஆதிக்கம் என எத்தனையோ ஆதிக்கங்களை நமது ரியல் லைப்பில் பார்த்திருப்போம். அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகி வருகிறது அனீஷின் ஆதிக்கம். தனது பாப்புலிஸ் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து இயக்கி வரும் அனீஷ் படத்தின் முக்கிய கேரக்டரில் நடிப்பதுடன் இசையும் அமைத்து வருகிறார்.

நாயகனாக விவின் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் நடிக்கிறார். அவருக்கு ஜோடி நடிகை மேகா நாயர். தொடக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா பசுபதி மே ராசக்காபாளையம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இப்போது ஆதிக்கம் படத்தில் நாயகியாக நடிக்கிறார். கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த தனக்கு இப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மேகா. அவரது கேரக்டர் அந்த அளவுக்கு அழகாக வந்திருக்கிறதாம்.

படத்தின் கதை...? ரவுடிகள் பற்றிய கதைதான். ஆனால் ரொம்பவே வித்தியாசமானது. இதுவரை எத்தனையோ ரவுடியிச கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், புதிய வெளிச்சத்தில் அவர்களை காட்டி ரவுடியிசம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தப் போகிறேன் என்கிறார் டைரக்டர் அனீஷ். பல குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன் சினிமா பக்கம் வந்திருக்கும் அவர் ஆதிக்கம் படம் பற்றி கூறுகையில், இதுவரை ரவுடிகள் பற்றி நிறைய படங்கள் வந்து விட்டாலும், அவற்றில் பெரும்பாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்பாவிகள் வன்முறை வழியில் போவதாக காட்டப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு மாறாக ரவுடிகள் இஷ்டப்பட்டே தான் வன்முறையை தேர்வு செய்கிறார்கள். தனது படத்தின் மூலம் உணர்த்தப்போவதாக சொல்கிறார். இதற்கு ஏற்றவகையில் ரவுடி கூட்டத்தில் சேரும் அப்பாவி வளர்ந்து தாதாவாகி, எம்.எல்.ஏ.வும் ஆகி அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்த பிறகு என்ன நடக்கிறது? என்பதை கதையாக அமைத்திருக்கிறாராம். காதல், காமெடி எல்லாவற்றையும் கதையோடு கலந்திருப்பதாக சொல்லும் அனீஷ் படத்தின் சூட்டிங்கை முழுக்க முழுக்க மக்கள் கூட்டத்தால் விழிபிதுங்கி நிற்கும் சென்னை நகர சந்து‌பொந்துகளிலேயே எடுத்து வருகிறார் என்பது ஹைலைட்.

ஏன் இந்த வலைப்பூ?


வணக்கம். நான் அனிஷ். ஆதிக்கம் படத்தோட டைரக்டர். என்னோட ஆதிக்கம் படம் பற்றிய செய்திகள், சுவாரஸ்யங்கள், ஸ்டில்களை உங்களோட பகிர்ந்துக்கிறதுக்காகத்தான் இந்த வலைப்பூவை தொடங்கியிருக்கேன். எனது இந்த ஆதிக்கம் மூவி வலைப்பூவுக்கும், என்னோட படத்துக்கும் ஆதரவு தருவீங்கன்னு நம்புறேன்.

நன்றி!