நிழல் உலகம் பற்றிய நிஜக்கதை! ஸ்பெஷல் ரிப்போர்ட்


Aadhikkam movie director Anish interview
இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்ற சப்-டைட்டிலுடன் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அப்படியொரு வெற்றிப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர் டைரக்டர் அனீஷ். இது இளைஞர்களின் காலம். அதற்கு திரையுலகம் மட்டும் விதிவிலக்கா என்ன? என்ற கேள்வியுடன் திரையுலகில் நுழைந்திருக்கிறார் 23 வயது இளைஞர் அனீஷ். சாதிக்கும் எண்ணம் கொண்ட இளைஞர் படையொன்றை திரட்டி 'ஆதிக்கம்' படம் மூலம் யுத்தத்துக்கு தயாராக்கிக் கொண்டிருக்கும் அனீஷ், நிழல் உலகத்தைப் பற்றிய பல நிஜங்களை 'ஆதிக்கம்' கொண்டு வந்து சாதிக்கும் என்று நம்புகிறேன்' என நம்பிக்கை ‌தெரிவிக்கிறார். அவரது தன்னம்பிக்கை தெரிக்கும் பேட்டி:-

உங்களைப் பற்றி...?

"என் அப்பா பிரபல தயாரிப்பாளர் பத்மநாபன். அவர் தெலுங்கில் பல படங்கள் தயாரித்தவர். அவர் இப்போது இல்லை. நான் சினிமாவில் அனுபவப்பட்டே கற்றுக் கொள்ள விரும்பும் ரகம். எல்லாக் கஷ்டங்களுக்கும் எனக்கு தெரிய வேண்டும் என்று கடைக்கோடி ஆளாகவும் வேலை பார்க்க தயங்காதவன் நான். சமுதாயப் பிரச்சினை சார்ந்த கதைதான் 'ஆதிக்கம்'. மக்களைப் பரவலாக சென்றடைய திரைப்படத்தை தவிர சிறந்த சக்தி வாய்ந்த சாதனமில்லை. எனவே சினிமாவுக்கு வந்து விட்டேன்.

ஆதிக்கம் எந்த மாதிரியான கதை?

"இது ஆக்ஷன், காதல், காமெடியுடன் முழுக்க முழுக்க நாட்டுநடப்பை சொல்லும் படம். நாட்டில் நடக்கும் இன்றைய பிரச்சனைகளின் கண்ணாடி போல 'ஆதிக்கம்' இருக்கும். ரவுடியிசத்தில் தொடங்கும் படம் அரசியலில் முடியும். நான் அறிந்தவரை பல ரவுடிகள், தாதாக்கள் சூழ்நிலையால் வந்தவர்களல்ல. விரும்பியே ரவுடியாகிறார்கள். விருப்பத்துடன் ரவுடியிசம் செய்கிறார்கள். சாதாரண ரவுடி தாதாவாக பதவி உயர்வு பெறுகிறான். எல்லாம் தானாகவோ, சூழ்நிலை கொண்டு விட்டோ நடப்பது கிடையாது. மனம் விரும்பியே செய்கிறார்கள், நடக்கிறது. நான் சொல்வது இந்த ரவுடிகள் வெறும் கருவிகள். இவர்களை உருவாக்குவது அரசியல்வாதிகள் தான். இளைஞர்களின் பண சபலத்தை மூலதனமாக்கி அவர்களை ரவுடிகளாக்குகிறார்கள். காரியத்தை முடித்துக் கொண்டபின் கைகழுவ நினைப்பார்கள். ஆனால் அதிகாரபலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆதரவால் ஆட்டம் போட்ட ரவுடிகளுக்கு நாற்காலிக் கனவு வந்து விடுகிறது. எப்படியோ சீட் பிடித்து எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி வரை ஆகிவிடுகிறார்கள். அப்படி ஒரு ரவுடி எம்.பி. ஆகிறான். அவன் மற்றும் அவனது கும்பல் பற்றிய கதைதான் 'ஆதிக்கம்'.

ரவுடிகள் விரும்பியே அந்த தொழிலில் இறங்குகிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?

தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும் என்பது போதையாகி விடுகிறது. அதை அதிகப்படுத்தியே ஆசைப்படுகிறான். பெரிய ரவுடி கையில் ஒரு கத்தியை பார்த்தால் அது நம் கையிலிருக்காதா என்று நினைக்கிறான். எங்காவது துப்பாக்கி பார்க்கும்போது அது தன் கையில் இருக்காதா, அதை வைத்து நம்மைக் கண்டு பயப்பட மாட்டார்களா என்று நினைக்க ஆரம்பிக்கிறான், விளைவு? ரவுடியாக வேண்டும் என்கிற ஆசை அதிகமாகிக் கொண்டே போகிறது. சேராத இடம் சேர்கிறான். போகக் கூடாத இடம் போகிறான். நடக்கக் கூடாத முடிவு கிடைக்கிறது. அதுதான் மரணம். ரவுடிகளை காரியத்துக்கு பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் போலீஸை வைத்து என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.

கொடூரமான ரவுடிகளுக்கு என்கவுண்டர்தானே முடிவு?

சிறு வெட்டுக் குத்து என்றால் கூட பல ஆண்டுகள் உள்ளே போட்டு விடுகிறார்கள். சிறு திருட்டு என்றால்கூட ஜாமீன் கிடைக்காது நம் நாட்டில். ஆனால் பல லட்சம் கோடி பணத்தை சுருட்டிய சாமியார்கள் ஜாலியாக உலா வருகிறார்கள். சட்டம் எதுவும் செய்யாது. பல பாலியல் பலாத்காரம் செய்த சாமியார்கள் சகஜமாக இருக்கிறார்கள். ஆனால் ரவுடிகளுக்கு என் கவுண்டர்தான் முடிவு. அப்படிப்பட்ட ரவுடிகளை ஊக்குவித்து வளர்த்த அரசியல்வாதிகளுக்கு எந்த கவுண்டரில் போடுவது?

படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்த எல்லா ரவுடியிசம், தாதாயிசம் வன்முறை எல்லாவற்றுக்கும் பின்புலமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்தான். மறைமுகமாக வேலைகளையும் செய்துவிட்டு ஒயிட் ஆண்டு ஒயிட்டில் உல்லாசமாக உலா வருகிறார்கள். இன்று யாருடைய ஆதிக்கம் உள்ளது. மக்களாட்சி நாடு என்று பெயர்தான் தவிர முழு ஆதிக்கம் செய்வது அரசியல்வாதிகள்தான். இதை நாட்டு நடப்புகளை கலந்து சொல்லியிருக்கிறேன்.

கதாபாத்திரங்கள் பற்றி?

ஐந்து பேர் நண்பர்கள். ரவுடிகள், அதில் ஒருவன் விருப்பப்பட்டு எம்.பி.யாகிறான். அவரை சுற்றி நடக்கும் பரபரப்பான திருப்பங்கள்தான் படக்கதை, படத்தின் நாயகன் வீவின், நாயகி மேகா நாயர்.

படப்பிடிப்பு எந்த அளவில் உள்ளது?

45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டது. இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதை. சென்னையில் கேமரா நுழையாத பல இடங்களில் புகுந்து படமாக்கி உள்ளோம். பாடல், சண்டைக் காட்சிகள் தவிர மற்ற அனைத்தும் படமாகிவிட்டது. இரண்டு பாடல்களுக்காக மெக்சிகோ செல்ல இருக்கிறோம்.

Thanks : Dinamalar.com

4 comments:

varuga... varuga.. velga velga.

 

நல்ல துடிப்பான பேட்டி. பாத்து இருங்க சார். அரசியல்வாதிய பகைச்சா என்ன ஆகும்னு தெரியுமா?

 

//அப்படிப்பட்ட ரவுடிகளை ஊக்குவித்து வளர்த்த அரசியல்வாதிகளுக்கு எந்த கவுண்டரில் போடுவது?
//

சபாஸ். சரியான கேள்வி. நீங்க ரொம்ப துணிச்சலான ஆளு போல இருக்கே. இன்னும் நிறைய எழுதுங்க. எதிர்பார்க்கிறோம்.

 

Post a Comment